| ADDED : நவ 16, 2025 04:12 AM
மதுரை: இலங்கை தம்பதிக்கு திருச்சியில் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருச்சி கோகுலேஸ்வரன் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு செய்தார். நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 1986 பிப்.9ல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தார். பெற்றோர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து, முகாமில் தங்கியுள்ளனர். இந்தியாவில் பிறந்ததால் குடியுரிமைச் சட்டப்படி இந்திய குடியுரிமை பெற்றவர் என மனுதாரர் தரப்பு தெரிவித்து. பிறப்புச் சான்று, கல்விச் சான்று, ஆதாரை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார். பிறப்புச் சான்றின் உண்மைத் தன்மையை திருச்சி மாநகராட்சி தரப்பு உறுதி செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தின்படி 1987 ஜூலை 1 க்கு முன் இந்தியாவில் பிறந்தவர், பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், அதை கருத்தில் கொள்ளாமல் இந்திய குடிமகனாக கருதப்படுவார். மனுதாரர் 1987 ஜூலைக்கு முன் பிறந்தவர் என்பதால் சட்டப்படி அவர் இந்திய குடிமகன். சான்றுகள் உறுதி செய்கின்றன. மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.