உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பழங்குடியினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வழக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 பழங்குடியினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வழக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர், உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு வன உரிமைச் சட்டப்படி தலா 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுார் தெய்வேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அரசு அறிவித்தது. இதனால் அங்கு வாழ்ந்த மலைவாழ் பளியர் இன பழங்குடிகள், இடம்பெயர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம், குறிஞ்சி நகர், பேரையூர் தாலுகா மொக்கத்தான்பாறை, அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குடியேறினர். அரசு, சிலருக்கு வீடுகள் வழங்கியது. வன உரிமைச் சட்டப்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறை அலுவலர்களின் தலையீடு இன்றி சிறு வனப் பொருட்கள், மூலிகைகளை சேகரிக்க பழங்குடிகளை அனுமதிக்க வேண்டும். குறிஞ்சி நகர் அரசு நிலத்தில் கால் நடைகளுக்கு தீவனம் பயிரிட, மூலிகைப் பண்ணை அமைக்க, வாழ்வாதாரத்திற்காக பாரம்பரிய பயிர்களை பயிரிட அனுமதிக்க வேண்டும். குறிஞ்சி நகரில் பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும். குறிஞ்சிநகர், அய்யனார்கோவில், அழகம்மாள்புரம், மொக்கத்தான்பாறையில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பத்திற்கு தலா 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், வனத்துறை செயலர்களுக்கு மனு அனுப்பினேன்.நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை செயலர்கள், மதுரை கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிச., 11க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை