உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில் விரிவான அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

 கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில் விரிவான அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

மதுரை: அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனு: பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்கள், எருமைகள், காளைகள், ஆடுகளை ஆண்டுதோறும் திறந்த வெளியில் சட்டவிரோதமாக பலியிடுவது வாடிக்கையாகி விட்டது. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதை தடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின் போது இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தற்போது செயல்பாட்டிலுள்ள இறைச்சிக்காக கால்நடைகளை வதை செய்யும் கூடங்களின் எண்ணிக்கை, அவை உரிமங்கள் பெற்றுள்ளனவா, விதிகள்படி செயல்படுகின்றனவா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு: தமிழகம் முழுதும் 194க்கு 95 வதைக் கூடங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில் 56 மட்டுமே உரிய அனுமதியுடன் இயங்குகின்றன. உரிமம் பெறாத 39 வதைக்கூடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள்: மாவட்ட வாரியாக வதைக்கூடங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத வதைக் கூடங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வதைக்கூடங்களில் ஒரு நாளைக்கு வதைக்கப்படும் மிருகங்களின் எண்ணிக்கை, கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை, ஆய்வு மாதிரிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக நவ. 21ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். அரசு தரப்பு: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி நடப்பதால் அதிகாரிகள் அப்பணியில் இருப்பர். எனவே கூடுதல் அவகாசம் தேவை. நீதிபதிகள்: உணவு பாதுகாப்புத்துறையில் இருந்து பூத் அலுவலர்கள் நியமிக்கப்படுவதில்லையே. மனுதாரர்: அழகர்கோவிலில் கோயில் வளாகத்திற்குள் உரிமம் பெறாமல் வதைக் கூடங்கள் செயல்படுகின்றன. அதனை கோயிலுக்கு வெளியில் அமைக்க வேண்டும். நீதிபதிகள்: அழகர்கோவில் விவகாரத்தில் மாவட்ட கலெக்டர், விலங்கு நலவாரியம், உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், சட்டத்துறை செயலர், கால்நடைத்துறை இயக்குனரகம், கோயில் செயல் அதிகாரி, அறநிலையத்துறை கமிஷனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நவ., 24க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை