| ADDED : நவ 16, 2025 03:51 AM
மதுரை: தமிழகத்தில் சென்னை, மதுரையில் நவ. 28 முதல் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப்போட்டி நடக்க உள்ள நிலையில் வெற்றிக்கோப்பை, தமிழக ஹாக்கி ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட வெற்றிக்கோப்பை, மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி முன்பாக ரசிகர்களிடம் காட்சிப்படுத்தப்பட்டது. அமைச்சர் மூர்த்தி கோப்பையை அறிமுகப்படுத்தினார். கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி. அரவிந்த், துணைமேயர் நாகராஜன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் சுரேஷ், ஹாக்கி இந்தியா பொருளாளர் சேகர் கலந்து கொண்டனர். ரசிகர்களின் கொண்டாட்டத்தின் ஊடே எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்திற்கு கோப்பை கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து திருநகர் ஹாக்கி மைதானம், வாடிப்பட்டியில் உள்ள தாய் பள்ளியில் வைக்கப்பட்டு தேனி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. திருநகர் அண்ணா விளையாட்டு மைதானத்தில், முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் சிவபாலன், கவுன்சிலர் சுவேதா, மாவட்ட ஹாக்கி செயலாளர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், முன்னாள் ஹாக்கி வீரர் மார்க்கண்டேயன், மூத்த பயிற்சியாளர் அழகப்பன் வரவேற்பு அளித்தனர். ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி மேலாளர் முருகன் ஏற்பாடுகளை செய்தனர்.