| ADDED : நவ 16, 2025 04:23 AM
'' கா டுகளுக்கு சென்று திரும்பி வரும் போது நினைவுகள் தவிர எதையும் எடுத்து வரக்கூடாது. காட்டுயிர்களை ரசிக்கிறோம் என்பதைத் தாண்டி அவற்றை காக்க வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு அதிகம் இருக்கிறது,'' என்கிறார் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் சி.ஏ.ஏ.கிருஷ்ணமூர்த்தி. மதுரை திருமங்கலம் ராயபாளையம் கிராமத்தை சேர்ந்த இந்த பல்லுயிர் புகைப்படக் கலைஞர், படித்தது முதுகலைப் பொருளாதாரம்; ஆனால் காட்டில் கண்முன் பார்க்கும் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றுவதில் கை தேர்ந்தவர்; பனை விதை நடுதல், காடுகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துபவர், பசுமை ஆர்வலர் என இவருக்கு பல முகங்கள். காட்டுயிர்களை புகைப்படம் எடுக்கும் அனுபவங்கள் குறித்து இவரிடம் கேட்ட போது... கல்யாண வீட்டில் புகைப்படம் எடுப்பது எளிது; காடுகளில் படம் எடுப்பது படுகஷ்டம். காடுகளை கணிக்கவே முடியாது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது பின்பக்கமாய் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். நாம் தேடும் விலங்கை ஒருமுறை மிஸ் செய்து விட்டால், அடுத்த வாய்ப்பு கிடைக்க ஆண்டுக்கணக்கில் கூட ஆகும். பயணத்திற்கு முன் எத்தனை நாள் பயணம், உணவு, மழைக்கான வாய்ப்பு, அட்டைப்பூச்சிகள் இருக்குமா என ஆராய்ந்தே திட்டம் வகுக்க வேண்டும். காடுகளில் பயணம் செல்லும்போது தங்குவதற்கு அனுமதி, அங்குள்ள பறவை, விலங்கினங்கள் பற்றிய தகவல்கள் என முன்கூட்டியே தயாராக செல்ல வேண்டும். மதுரையில் புள்ளி மான்கள் புள்ளிமான்களை தேடி திருமங்கலம் கரிசல் காட்டிற்கு ஒருநாள் சென்றபோது, தனியாக புள்ளிமானை காண நேரிட்டது. உடனே கேமராவில் படம் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, எடுத்த 3 படமும் தெளிவில்லாமல் இருந்தது; அந்த வருத்தத்தில் அன்று சாப்பிடவே இல்லை. ஆனாலும் புள்ளிமான்களைத் தேடும் முயற்சியை தொடர்ந்தேன். கண்மாய்க்கரையில் மூச்சு கூட விடாமல் பதுங்கி புள்ளிமான் கூட்டத்தை படம் பிடித்தேன். அதை மதுரை இயற்கை பேரவையில் பகிர்ந்த போது, 'மதுரையில் புள்ளிமான்கள்' என நாளிதழ்களில் செய்தி வெளியாகின. சலீம் அலியின் புத்தகத்தில் இந்தியா முழுக்க வெள்ளை வல்லுாறு உள்ளது என எழுதி இருக்கிறார்; ஆனாலும் தென் இந்தியாவில் 40 ஆண்டுகளாக வெள்ளை வல்லுாறு பதிவில் இல்லை. எங்கள் தன்னார்வலர்கள் குழுதான் முதன்முதலில் அரிட்டாபட்டி மலையில் வெள்ளை வல்லுாறு உள்ளதை வெளி உலகிற்கு படம்பிடித்து காட்டியது. பின்னர் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் அரிட்டாபட்டியில் நுாற்றுக்கணக்கான அரிய பறவை இனங்கள் உள்ளதை கண்டறிந்தன. ஸ்ரீவில்லிபுத்துார் காடுகளில் யானை சாணத்தின் அருகிலேயே உடைந்த பீர் பாட்டில் கிடந்தது; அதன் மீது மிதித்திருந்தால் யானைக்கு என்ன ஆகியிருக்கும் என மக்கள் உணருவதில்லை. ஸ்ரீவில்லிபுத்துாரில் பறவைகள் கணக்கெடுப்பிற்கு செல்லும் போது ௫0க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் ஆற்று ஓரங்களில் இறந்து கிடந்தன; எல்லைப்பகுதிகளில் நாட்டு மாடுகளில் இருந்து ஆந்த்ராக்ஸ் பரவியது தான் காரணம் என அறியும்போது அதிர்ச்சியாக இருந்தது. புலிக்கறி சாப்பிட்டால்... புலிக்கறி சாப்பிட்டால் ஆண்மை விருத்தி அடையும் என்ற தவறான கருத்து சீனாவில் நிலவுகிறது. உலகில் வேட்டையாடப்படும் அரிய வகை உயிரினங்களும் சீனாவிற்கு தான் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. சீன மருத்துவத்தை தடை செய்தாலே உலகின் 50 சதவீத உயிர்கள் காப்பாற்றப்படும். மசினக்குடி காட்டில் வன விலங்கு கணக்கெடுப்பிற்காக சென்றபோது, ஐநுாற்றுக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் எங்களை நோக்கி வந்தன; 'செந்நாய் கூட்டம் தான் துரத்தி வந்திருக்கும்' என அந்த பகுதியை சேர்ந்தவர் கூறினார். திரும்பி வரும்போது நாங்கள் வந்த பாதையில் புலித்தடம் உள்ளதை கண்டு அதிர்ந்தோம். புலி தான் துரத்தியிருக்கிறது. பின்னர் புகைப்படம் எடுத்து ஜி.பி.எஸ்., உதவியுடன் புலியின் இடத்தை குறித்து வைத்துக் கொண்டோம். சேலம் பகுதியில் காடுகள், 10 ஏக்கர் காடு பின்னர் எஸ்டேட்டுகள் என மாறி மாறி வரும்; பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் அங்கு விலங்குகள் கணக்கெடுப்பிற்கு சென்றோம். அங்கு சிறிய வகை பாம்பு இறந்து கிடந்தது. அதன் இடத்தை ஜி.பி.எஸ்., வைத்து குறித்துக் கொண்டு வழக்கம் போல புகைப்படம் எடுத்து வந்து விட்டோம். பின்னர் கிடைத்த தகவல் குழுவை திக்குமுக்காட வைத்துவிட்டது; உலகில் சேர்வராயன் மலையில் மட்டுமே வாழும் கவசவால் பாம்பு, கல்வராயன் மலையிலும் இருந்துள்ளது. இதை முதலில் வெளியுலகிற்கு சொன்ன குழுவில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது என்றார். இவருடன் பேச 75986 74611