| ADDED : நவ 20, 2025 05:19 AM
மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய் மேம்பாட்டு பணியை முறையாக மேற்கொள்ளாத நிறுவனம், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் மனுதாரர் மீண்டும் ஆய்வு செய்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை வழக்கறிஞர் பாலமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாடக்குளம் கண்மாய் கரையை பலப்படுத்தி ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. விராட்டிபத்து அருகில் அமைய உள்ள பைபாஸ் சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. கண்மாய்க்கரை ஓரங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. அதற்கு எர்த் பீம், கான்கிரீட் துாண்கள் அமைக்கவில்லை. முறையான, முழுமையான கட்டுமானமாக இல்லை. நீர்வரத்து அதிகரித்தால் தடுப்புச்சுவர் சேதமடையும். கரையை பலப்படுத்த முறையாக தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர், பெரியாறு-வைகை பாசன கோட்ட செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஏப்.2ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'பெரியாறு-வைகை பாசன செயற்பொறியாளர் 8 வாரங்களில் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. அதை நிறைவேற்றவில்லை. பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கத் தவறிவிட்டனர். பக்கவாட்டு சுவர்களில் வெடிப்பு, கரை பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் ரூ.17.60 கோடி வீணாகியுள்ளது. முறையாக கட்டுமானம் மேற்கொள்ளாத நிறுவனம் மற்றும் ஆய்வு செய்யத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பிரமணியன் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர் அசோக்,'கட்டுமானத்தில் எவ்வித சேதமும் இல்லை,' எனக்கூறி போட்டோ ஆதாரங்களை சமர்ப்பித்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீண்டும் கட்டுமான பணியை பார்வையிட்டு திருப்தியளிக்கிறதா, இல்லையா என்பது குறித்து டிச.9 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.