உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது

மதுரையில் அமெரிக்க டாக்டருக்கு விருது

மதுரை : மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை 'டாக்டர் ஜி.வெங்கடசாமி அறக்கட்டளை சொற்பொழிவு விருது' சிகாகோவிலுள்ள இலினாய்ஸ் பல்கலை, கண் மருத்துவ பேராசிரியர் மரிலின் டி.மில்லருக்கு வழங்கப்பட்டது. கண் மருத்துவம், பார்வை குறைபாடுகள் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவோருக்கு, அரவிந்த் கண்காப்பு அமைப்பின் நிறுவனர் வெங்கடசாமி நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் குழந்தைகள் கண் மருத்துவம் மற்றும் வயது வந்தோர் மாறுகண் அறுவை சிகிச்சை பிரிவு துவங்க காரணமாக இருந்தவர் டாக்டர் மரிலின் டி.மில்லர். இவர் 25 ஆண்டுகள் நைஜீரியாவிலும் பணிபுரிந்துள்ளார். இவரது சேவைகளை பாராட்டி, அரவிந்த் கண்காப்பு அமைப்பின் இயக்குனர் சீனிவாசன் விருது வழங்கினார்.

டாக்டர் மரிலின் டி.மில்லர் பேசுகையில், ''மருத்துவ துறையில் அபரிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. மரபணுக்கள் குறைபாடினால் பிறப்பிலே குழந்தைகளுக்கு பார்வை இழப்புகள் ஏற்படுகிறது. அரவிந்த் கண் மருத்துவமனையில் பிறவி கண் நோய் குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்காக தனி பிரிவு துவங்கி, பார்வை இழப்புகளை தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நம்பெருமாள் சாமி, அரவிந்த் கண்காப்பு அமைப்பின் தலைவர் ரவீந்திரன், இயக்குனர் நாச்சியார், டாக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி