உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 17 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத கட்டடத்திற்கு பாதுகாப்புச்சுவர்: கட்டடம் ரூ.60 லட்சம்; சுற்றுச்சுவர் ரூ.20 லட்சம் வீண்

17 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத கட்டடத்திற்கு பாதுகாப்புச்சுவர்: கட்டடம் ரூ.60 லட்சம்; சுற்றுச்சுவர் ரூ.20 லட்சம் வீண்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடம் 17 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் சிதைந்து போன நிலையில், மேலும் ரூ. 20 லட்சத்திற்கு சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர்.உசிலம்பட்டி நகராட்சி பழைய குப்பைக்கிடங்கு தேனி ரோட்டில் இருந்தது. அப்பகுதி குடியிருப்பு பகுதியாக மாறியதால், குப்பை கிடங்கிற்கு மாற்று இடம் தேர்வு செய்யாமல் ரூ.60 லட்சம் செலவில் 2007ல், புதிய அலுவலக கட்டடம் கட்டினர். குப்பை கொட்ட மாற்று இடம் இல்லாததால், புதிய கட்டடம் உருவான பின்பும் அலுவலகத்தை அங்கு மாற்றவில்லை.தினமும் குப்பையை கொட்டியதால் அக்குவியலின் நடுவில் கட்டடம் புதைந்தே போனது. அடிக்கடி குப்பையில் ஏற்படும் தீயால் கட்டடப்பகுதி பெரும் சேதமடைந்தது. சமீபத்தில் யு.வாடிப்பட்டியில் குப்பைக் கிடங்கிற்கு மாற்று இடம் தேர்வு செய்தனர். அத்துடன் குப்பை அகற்றும் பணிகளும் நடந்தது.குப்பையை அகற்றியபின் புதைந்து, சிதைந்த கட்டடத்திற்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும், புதிய அலுவலகத்தை அங்கு கொண்டு செல்ல முடியாத அளவுக்கு கட்டடம் சேதமடைந்துள்ளது. கட்டடத்தில் இருந்த ஜன்னல், டைல்ஸ் கற்களை சிறிது சிறிதாக அகற்றினர்.தற்போது கட்டடம் மட்டும் தனியாக நிற்கிறது. மக்களின் வரிப்பணம் ரூ.80 லட்சம் செலவிடப்பட்டும் எந்தப் பயன்பாடுமின்றி வீணாகி விட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பது மட்டும் மக்களின் மனதில் கேள்வியாக எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை