உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தவறான புள்ளிவிபரம் கொடுத்து மதுரை மக்களை வஞ்சித்து விட்டார் ஸ்டாலின் மருத்துவரணி இணைச்செயலாளர் சரவணன் குற்றச்சாட்டு

 தவறான புள்ளிவிபரம் கொடுத்து மதுரை மக்களை வஞ்சித்து விட்டார் ஸ்டாலின் மருத்துவரணி இணைச்செயலாளர் சரவணன் குற்றச்சாட்டு

மதுரை: ''மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் முடங்கியதற்கு ஸ்டாலினின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். தவறான புள்ளிவிபரம் கொடுத்து மதுரை மக்களை வஞ்சித்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரையில் அவர் கூறியதாவது: மதுரையில் 32 கி.மீ., அளவில் ஒத்தக்கடை - திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.11,368 கோடியும், கோவையில் 34.8 கி.மீ.,க்கு ரூ.10,740 கோடியும் திட்டமிடப்பட்டது. 2023 ஜூனில்மத்திய அரசுக்கு தமிழக அரசு மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை கொடுத்தது. மத்திய அரசு கூடுதல் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியது. ஓராண்டு கழித்து கால தாமதமாக 2024ல், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மக்களின் வழக்கமான போக்குவரத்திற்கும் மெட்ரோ ரயிலுக்கும் மாறும் நேரம், வேறுபாடு என விளக்கங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழகத்தை புறக்கணித்ததாக கூறி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மற்ற மாநிலங்களில் 2022 கணக்குப்படி மின்சார வாரிய பில் இணைப்பு உள்ளிட்ட சரியான தரவுகளை கொடுத்துள்ளார்கள். மதுரையில் 25 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். ஆனால் 15 லட்சம் என கணக்கீடு செய்து அறிவித்து மதுரை மக்களை ஸ்டாலின் வஞ்சித்து விட்டார். மதுரை மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின், மாநகராட்சியின் வரலாறு காணாத அளவில் ஊழல், பழனிசாமி ஆட்சியில் துாய்மையான நகரமாக இருந்த மதுரையை இன்று அசுத்தமான பட்டியலில் முதலிடம் வந்தது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் முடங்க தி.மு.க., அரசின் மோசமான நிர்வாக சீர்கேடுதான் காரணம். சென்னை இரண்டாம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதன் மூலம் ரூ.63,346 கோடி நிதியை பெற்றுக் கொடுத்தவர் பழனிசாமி. தற்போது கூட மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கோவையில் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். 2026 தேர்தலில் அவர் மீண்டும் முதல்வராக வருவார். அப்போது மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி