உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அரசியல் களத்திற்கு வராத விஜய் தே.மு.தி.க., பிரேமலதா கடுப்பு

 அரசியல் களத்திற்கு வராத விஜய் தே.மு.தி.க., பிரேமலதா கடுப்பு

அவனியாபுரம்: ''த.வெ.க., தலைவர் விஜய் முதலில் களத்திற்கு வந்து ஏராளமான பணிகள் செய்ய வேண்டும். செய்தியாளர்களையே சந்திக்காத த.வெ.க., பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க., அதுபோன்ற கட்சி இல்லை'' என மதுரையில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றதை நான் கவலையுடன் பார்க்கிறேன். இது போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வர வேண்டும். அப்போதுதான் நிறைய இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும். முதலீடு தமிழகத்திற்கு வராததற்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும். எஸ்.ஐ.ஆர்.,க்கு தேர்தல் கமிஷன்தான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிராக த.வெ.க., போராட்டம் நடத்துவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. துாய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதால் மட்டுமே அவர்களுக்கான தேவை பூர்த்தியாகி விடாது. அவர்களது தேவையை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும், என்றார். களத்திற்கு வராத விஜய் மதுரை கூடல்நகரில் தே.மு.தி.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரமேலதா பங்கேற்றார். அங்கு செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: 2011ல் மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் முரசு சின்னம் வென்றுள்ளது; அதனால் நான் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தேர்தலில் யார், எங்கு போட்டியிடுவர் என்பதை இப்போது கூற முடியாது. கூட்டணி பற்றி ஜன.,9 ல் கடலுார் மாநாட்டுக்குப் பின் அறிவிப்போம். த.வெ.க., தலைவர் விஜய் முதலில் களத்திற்கு வரவேண்டும். அவர் இன்னும் ஏராளமான பணிகளை செய்ய வேண்டும். அதனால் செய்தியாளர்களையே சந்திக்காத த.வெ.க., பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க., அதுபோன்ற கட்சி இல்லை. பீஹார் தேர்தலில் பா.ஜ., - நிதிஷ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பீஹாரில் முதல்வர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிக்கு ஓட்டு சேகரித்தார். ஆனால் தோல்வியடைந்துள்ளனர். அதற்காக அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. ஊழலால் துாய்மையற்ற மாநகராட்சியாக மாறியுள்ள மதுரையை முதல்வர் ஸ்டாலின்தான் சரிசெய்ய வேண்டும். எங்கு பார்த்தாலும் கொலை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இரும்புக்கரம் கொண்டு அதைக் காப்பது முதல்வரின் கடமை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ