ராசிபுரம்: ராசிபுரத்தில், பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவன், பலத்த காயமடைந்த பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, வேன் டிரைவரை போலீஸார் கைது செய்தனர். ராசிபுரம் அடுத்து மெட்டலா அருகே பிலிப்பாகுட்டையை சேர்ந்தவர் சேர்ந்தவர் சிவராஜ். அவரது மகன் கவின் (5), முள்ளுக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், கவின் பள்ளி வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வேனை டிரைவர் துரைராஜ் ஓட்டி வந்தார். கணவாய்பட்டி வளைவில் பள்ளி வேன் வேகமாக திரும்பும் போது, கதவு திறந்து கொண்டது. அப்போது, கவின் வேனில் இருந்து கணவாய்ப்பட்டி மெயின் ரோட்டில் விழுந்தான். அதையறியாமல், டிரைவர் பிலிப்பாக்குட்டைக்கு வேனை ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த தாய், மகன் வேனில் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். உடனே, வந்த வழியிலயே வேனை டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். வேனில், கவின் பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் சென்றுள்ளனர். அப்போது, கணவாய்ப்பட்டி சாலையில், தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கவின் இறந்து கிடந்தான். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் மாணவன் பிரேதத்துடன், ராசிபுரம்- ஆத்தூர் சாலை உள்ள மெட்டலா பிரிவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.ஏ.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார், நாமக்கல் ஆர்.டி.ஓ., ராமசாமி, தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேன் டிரைவர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோஷம் எழுப்பினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து, சாலை மறியலை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சாலை மறியல் நடந்தததால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, பள்ளி வேன் டிரைவர் துரைசாமி (49), நாமகிரிப்பேட்டை போலீஸார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.