நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 12 மையங்களில் நடந்த முதல்வரின் திறனாய்வு தேர்வில், 2,814 பேர் பங்கேற்றனர். 386 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.அரசு பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், முதல்வரின் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில், 500 மாணவர்கள், 500 மாணவியர் என, மொத்தம், 1,000 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு உதவித்தொகையாக, ஒரு கல்வியாண்டுக்கு மாதம், 1,000 வீதம், 10 மாதங்களுக்கு, 10,000 ரூபாய் என, இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.அதன்படி, நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. அதில், அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ்- 1 பயிலும் மாணவர்கள் தகுதியானவர்கள். தமிழக அரசின், 9, பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள பாட திட்டங்களின் அடிப்படையில், இரு தாள்களாக தேர்வு நடத்தப்படுகிறது.ஒவ்வொரு தாளிலும், 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும், முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொல்லிமலை அரசு மாதிரி பள்ளி, நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, மொத்தம், 12 மையங்களில் தேர்வு நடந்தது.முதல்வரின் திறனாய்வு தேர்வு எழுதுவதற்காக, மாவட்டம் முழுதும் இருந்து, அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 3,200 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று எழுதிய தேர்வில், 2,814 பேர் பங்கேற்றனர். 386 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.