| ADDED : ஆக 23, 2024 02:12 AM
குளித்தலை, ஆக. 23-குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பிடம் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. நேற்று காலை 8:00 மணியளவில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் கலெக்டர் தங்கவேல் கட்டண கழிப்பிடத்தை ஆய்வு செய்தார். சிறுநீர் கழிப்பிடத்திற்கு இரண்டு ரூபாய், மலம் கழிப்பதற்கு மூன்று ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு அதற்கான கட்டண ரசீதும் வழங்கியுள்ளனர்.இதில் மூன்று ரூபாய் ரசீது மட்டும் இருந்தது. சிறுநீர் கழிப்பதற்கான இரண்டு ரூபாய்க்கான ரசீது இல்லை. இது குறித்து கலெக்டர் கேள்வி எழுப்பினார். உள்ளே இருந்து வெளியே வந்த பொது மக்களிடம் எவ்வளவு பணம் செலுத்தினீர்கள் என்று கேட்ட போது, ஐந்து ரூபாய் என்று தெரிவித்தனர். அப்போது, பராமரிப்பாளரிடம் கலெக்டர், மூன்று ரூபாய் வாங்குவதற்கு பதிலாக எப்படி ஐந்து ரூபாய் வாங்கலாம் என்று கேட்டபோது, இரண்டு ரூபாய் சில்லறை இல்லை என கூறினார்.நகராட்சி கமிஷனர், சம்பந்தப்பட்ட ஊழியரையும் இது போல் நடந்து கொள்ளக்கூடாது; மீறி கட்டண வசூல் செய்ததாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை செய்தார்.தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து குடிநீரை பருகினார். அதில், குளோரின் பவுடர் கலக்காதது குறித்து ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி கமிஷனர் நந்தகுமார் மற்றும் நகராட்சி பணியாளர் கோவிந்தன் ஆகியோர் பதில் சொல்ல முடியாமல் திணறினர். ஆய்வின்போது தாசில்தார் சுரேஷ் மற்றும் நகராட்சி, வருவாய் துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.