நாமக்கல்: 'மே மாதம் வரை மழை இல்லாததால், பயிர்கள் கருகி வீணாகி விட்டன. அதனால், நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 724.06 மி.மீ., கடந்த, 25 வரை, 251.27 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஜூன் முடிய இயல்பு மழையளவை விட, 52.98 மி.மீ., அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2024 மே வரை, நெல், 25 ஹெக்டேர், சிறுதானியங்கள், 5,716 ஹெக்டேர், பயறு வகைகள், 1,124 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள், 3,429 ஹெக்டேர், பருத்தி, 522 ஹெக்டேர், கரும்பு, 1,718 ஹெக்டேர் என மொத்தம், 12,534 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நடந்த விவாதம் பின்வருமாறு:ரவிச்சந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கொ.ம.தே.க.,: நாமக்கல் - மோகனுார் சாலையில், அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்ட இடத்தில், பொது மக்களின் வசதிக்காக, தாலுகா மருத்துவமனை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.காட்டு தீயால் பாதிக்கப்பட்ட கொல்லிமலை வனப்பகுதியில், உடனடியாக மரங்களை நட வேண்டும். ஓராண்டாகியும், ரேஷன் கார்டு கிடைக்காத நிலையில், விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெருமாள், விவசாயி: கடந்த மே மாதம் வரை மழை இல்லாததால், பயிர்கள் கருகி வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.குப்புதுரை, விவசாயி: பரமத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.