உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெண்ணந்துாரில் சிறுத்தை நடமாட்டமா?

வெண்ணந்துாரில் சிறுத்தை நடமாட்டமா?

வெண்ணந்துார்;வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, கடந்த, 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், அத்தனுார் அருகே, இரவு நேரத்தில் டூவீலர் ஒன்று செல்லும்போது, அதற்கு முன்னதாக சாலையை சிறுத்தை போன்ற ஒரு உருவம் கடப்பது போல் தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர், அத்தனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சிறுத்தை, ஏற்காடு, கொல்லி மலை போன்ற அடர்ந்த வனப்பகுதியிலேயே இல்லை. சிறுத்தை நடமாடுவது போல் வீடியோ பரவியதால், நேற்று முதல் வெண்ணந்துார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறது என்றால், உணவிற்காக மட்டுமே வெளியில் வரும். அவ்வாறு வந்திருந்தால், இப்பகுதியில் ஆடு, மாடு மற்றும் நாய் போன்ற உயிரினங்களை கடித்திருக்கும். ஆனால், இது போன்று எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. சிறுத்தை போன்றே கால் தடம் புணுகு பூனை, காட்டுப் பூனை மற்றும் சிறுத்தை பூனை போன்ற விலங்குகளுக்கும் இருக்கும். மேலும், கால் தட ஆய்வுக்கு பின்னரே அது எந்த மாதிரியான விலங்கு என தெரியவரும். தொடர்ந்து, இப்பகுதியில் அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், ராசிபுரம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி