ராசிபுரம் : ''நம் கூட்டணி வேட்பாளரான மாதேஸ்வரனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.ராசிபுரம் நகராட்சியில், தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி, கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு அமைச்சர் மதிவேந்தன் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ராசிபுரம் நகராட்சியில் மட்டும், 560 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுதும் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத வரலாற்று நிகழ்வாக, 14,000 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம், ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை, புறவழிச்சாலை, போதமலைக்கு தார்ச்சாலை, டைட்டல் பார்க், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தறித்தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியுள்ளோம்.ஆனால், கடந்த, 10 ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், மின்துறை அமைச்சர் நம் மாவட்டத்தில் இருந்தும் எதையும் செய்யவில்லை. அ.தி.மு.க., அரசு இலவசம் தருகிறேன் என ஓடாத மிக்ஸி, கிரைண்டர், பேனை கொடுத்து பெண்களை ஏமாற்றினர். ஆனால், தி.மு.க., வழங்கிய கலைஞர், 'டிவி' இதுவரை நம் வீடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ள, தி.மு.க., அரசையும் நம் முதல்வரையும் ஆதரித்து, நம் கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சேர்மன் கவிதா, தி.மு.க., நிர்வாகி ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.