உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திரவ உயிர் உரம் பயன்படுத்தி கூடுதல் லாபம் பெற வேளாண் இணை இயக்குனர் யோசனை

திரவ உயிர் உரம் பயன்படுத்தி கூடுதல் லாபம் பெற வேளாண் இணை இயக்குனர் யோசனை

நாமக்கல் : 'திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி கூடுதல் லாபம் பெறலாம்' என, நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் துரைசாமி, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம், பருத்தி, தென்னை, வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் சாகுபடி செலவை குறைத்து, கூடுதல் லாபம் பெற, திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம். ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால், மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, சுற்றுப்புற சூழல் மாசுபடுவதோடு, சுகாதாரமும் பாதிக்கிறது.உயிர் உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக மகசூலும் கிடைக்கும். உயிர் உரங்கள், வேளாண்மை துறையின் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை பயன்படுத்துவதால், ரசாயன உரங்களின் பயன்பாடு, 20 முதல், 25 சதவீதம் வரை குறைவதோடு கூடுதல் லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.உயிர் உரங்களை, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில், நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும். விதைகளை, விதை நேர்த்தி செய்யும்போது பூஞ்சாண கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்தான், கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். திரவ உயிர் உரங்களை, ஒரு ஹெக்டேருக்கு, 500 மி.லி., அசோஸ்பைரில்லம் மற்றும் 500 மி.லி., பாஸ்போபாக்டீரியா உடன், 500 மி.லி., பொட்டாஷ் மொபிலைசிங் பேக்டீரியா என்ற அளவில் உபயோகப்படுத்த வேண்டும். நெற்பயிருக்கு, ஜிங் மொபிலைசிங் பாக்டீரியா உயிர் உரமும், பயறு வகை பயிர்களுக்கு ரைசோபியம், எண்ணெய் வித்துகளுக்கு ரைசோபியம் உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து, உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை