நாமக்கல்: ''மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழக அரசு, 'ஸ்டிக்கர்' ஒட்டி, தனது திட்டம் போல் காட்டிக் கொள்கிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.நாமக்கல் லோக்சபா தொகுதி, பா.ஜ., தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய தகவல்- ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நாட்டை மிக வேகமாக வளர்ச்சி அடைந்த நாடாக பிரதமர் உருவாக்கி வருகிறார்.ஏழை எளிய மக்கள் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 80 கோடி பேருக்கு மாதம், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு பயன்பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு, 'ஸ்டிக்கர்' ஒட்டி தனது திட்டம் போல காட்டிக் கொள்கிறது. இந்த உணவு பொருட்களை வழங்குவது பிரதமர் நரேந்திர மோடி.விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய், 'கிசான் சம்மான்' நிதி, ஏழை எளிய மக்களின் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்பட அடுத்த, 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை பிரதமர் அளித்துள்ளார். பிரதமரின் லட்சியம், வரும், 25 ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதை நோக்கி நாம் பயணம் செய்து வருகிறோம்.ராமக்கல் என்பதுதான், நாமக்கல்லாக மருவி உள்ளது. ராமருடைய தொடர்பில் உள்ள ஊர்தான் நாமக்கல். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவை நிறைவேற்றி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.பெங்களூருவில் இருந்து மதுரைக்கு, வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாமக்கல் வழியாக இந்த ரயில் இயக்கப்படும். நாமக்கல்லில் அந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.