நாமக்கல், 'விவசாயிகள் உயிர்மச்சான்று பெற, மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என, நாமக்கல் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய அளவில், பல்வேறு கால சூழ்நிலைகள் மற்றும் பல காரணங்களால் கடந்த, 50 ஆண்டுகளில், வேளாண் தொழிலில் எண்ணற்ற பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மனித இனத்திற்கு மட்டுமின்றி, பல உயிரினங்களின் வாழ்வியல் முறைகளில் பெரும் தாக்கத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மனித இனத்தில் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் பெயரிடப்படாத பல நோய்கள், நம் முன்னால் பெரிய சவாலாக நின்றுகொண்டிருக்கிறது.இதற்கான சிறந்த தீர்வை தேடி நாம் நகரும்போது, அனைவருக்கும் பொருத்தமான தீர்வாக வாழ்வியல் முறையில் ஏற்பட வேண்டிய மாற்றமும், பல ஆயிரம் ஆண்டுகளாக, நாம் செய்து வந்த பாரம்பரிய வேளாண் முறையுமே பெரும் நம்பிக்கையாக உள்ளது. இந்த வாழ்வியல் முறையில் மாற்றம் என்பது நம் பாரம்பரிய வேளாண் முறையான இயற்கை வேளாண் என்று அழைக்கக்கூடிய உயிர்ம வேளாண்மையில் இருந்து துவங்குகிறது. உயிர்ம வேளாண்மையில் நாம் பயன்படுத்த வேண்டியது பாரம்பரிய விதை ரகங்களையும், நாட்டு காய்கறிகளையும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.இத்தகைய நன்மைகள் கொண்ட உயிர்ம வேளாண்மையை செய்ய விரும்பும் விவசாயிகள், எந்தவித கட்டணமும் இன்றி மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வந்துள்ள, தேசிய உயிர்ம உற்பத்தி திட்டம் மற்றும் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டம் ஆகியவற்றில் பதிவு செய்து, தங்களால் உற்பத்தி செய்யப்படும் உயிர்ம பொருட்களை, ஆரோக்கிய வாழ்வை விரும்பும் அத்தனை பேருக்கும் நீங்களே விலை நிர்ணயம் செய்து வழங்கலாம்.மேலும், இந்த உயிர்ம வேளாண்மையின் கீழ் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், நாமக்கல் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.