நாமக்கல் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:டில்லியில், நேற்று முன்தினம், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில், தமிழகத்திற்கு, ஜனவரி மாதத்துக்கான, 2.76 டி.எம்.சி., தண்ணீரை, காவிரியில் இருந்து, கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண் ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டின் கணக்குப்படி, 166 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 75 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. 91 டி.எம்.சி., தண்ணீரை நிலுவையில் வைத்துள்ளது.இந்நிலையில், நிலுவையில் உள்ள நீரை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், வெறும் கண் துடைப்புக்காக, காவிரியில் ஜன., மாதத்திற்கான, 2.76 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே திறக்க காவிரி மேலாண் வாரியத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.இது தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. அதனால், தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்படி தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி ஒழுங்காற்று குழுவின் செயலுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.வரும் காலங்களில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை கர்நாடகா அரசு வழங்க, காவிரி ஒழுங்காற்று குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.