நாமக்கல்: நாமக்கல்லில், தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 1,300 தி.மு.க.,வினரை போலீஸார் கைது செய்து, பின் விடுவித்தனர். தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடும் அ.தி.மு.க., அரசை கண்டித்து, நாமக்கல்-மோகனூர் சாலை, அண்ணாதுரை சிலை, ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிவு செய்தனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க.,வினர், நாமக்கல்-மோகனூர் சாலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று காலை 10 மணியளவில் குவியத் துவங்கினர். அவர்களை, ஏ.எஸ்.பி.,க்கள் சுப்புலட்சுமி, சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.கூட்டம் கூட்டமாக வந்தவர்களை அப்படியே அள்ளி, வேனில் ஏற்றி நகரில் உள்ள தனியார் மற்றும் நகராட்சி திருமண மண்டபங்களுக்கு அனுப்பி வைத்தனர். கைதுக்கு பயந்துபோன அக்கட்சியினர், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், அரசு மருத்துவமனை, நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகம் ஆகியவற்றுக்குள் புகுந்து தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மேலும், டீ கடைக்குள் பதுங்கி இருந்த தி.மு.க.,வினரையும் போலீஸார் விட்டு வைக்கவில்லை. எம்.பி., ராமலிங்கம் தலைமையில் வந்த கட்சியினர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், போலீஸாரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். அதில் பங்கேற்ற மாஜி துணை சபாநாயகர் துரைசாமி, தேர்தல் பனிக்குழு செயலாளர் பார் இளங்கோவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.மாஜி எம்.எல்.ஏ.,க்கள் ராமசுவாமி, பொன்னுசாமி, நகரச் செயலாளர்கள் நடேசன், செல்வராஜ், சேகர், ஒன்றியச் செயலாளர் வக்கீல் கைலாசம், யூனியன் சேர்மன்கள் நவலடி, ராணி, இளஞ்செழியன், பேரூர் செயலாளர் அர்ஜூனன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட, 1.300 பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டனர்.