நாமக்கல்: நகராட்சிக்கு வரி செலுத்துவதற்கு, 24 மணி நேரம் கெடு விதித்து, நோட்டீஸ் வினியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. அவற்றில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பல்வேறு வரி இனங்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை, முதல் அரையாண்டுக்கு, ஏப்., 15 வரையும், இரண்டாம் அரையாண்டுக்கு, அக்., 15க்குள் வரிகளை செலுத்தவேண்டும் என, பொதுமக்கள், வணிகர்களுக்கு, நகராட்சி நிரவாகம் அறிவுறுத்தியது.ஆனால், இதுவரை, 65 சதவீதம் மட்டுமே வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. அதனால், நகரில் வரிபாக்கி வைத்துள்ளவர்களுக்கு, 24 மணி நேர கெடு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது-. அதன் மூலம், நோட்டீஸ் கிடைத்த ஒரு நாளுக்குள் நிலுவையில் உள்ள வரியை பொதுமக்கள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்களின் வீடுகளில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் பிரசாத், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில், வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வரி வசூல் செய்து வருகின்றனர்.விடுமுறை நாளான நேற்றும், நகராட்சி அலுவலர்கள் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று, 24 மணி நேர கெடு நோட்டீஸ் வழங்கினர்.