| ADDED : ஆக 15, 2024 06:53 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் அருந்ததியர் தெருவில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், காளியம்மன் கோவில் அமைத்து, கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனால், காளியம்மன் கோவிலை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்து தரவேண்டும் என, கோரிக்கை வைத்தனர். மேலும், இதனை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில், எலச்சிபாளையம், ஆர்.ஐ., அலுவலகம், நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்திருந்தனர். ஆர்.ஐ., அனுராதா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வரும், 19ல் இருதரப்பினரையும் அழைத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இதனால், நேற்று நடக்க இருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.