| ADDED : ஜன 09, 2024 11:12 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், காணிக்கைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே, காவிரி அடுத்த வ.உ.சி., நகர் பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்றிரவு கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த காணிக்கைகளை திருடிச்சென்றுள்ளனர். நேற்று காலை, வழக்கம்போல் கோவிலுக்கு வந்த அப்பகுதி மக்கள், கோவில் கேட், உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார், கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பல நாட்களாக நோட்டமிட்டு, ஆளில்லாத நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்கள் யார் என, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த நவ., 17ல், பள்ளிப்பாளையம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலும், இதேபோல் இரவு நேரத்தில் டூவீலரில் வந்த மூன்று பேர், கோவிலின் கேட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியல் பணத்தை திருடிச் சென்றனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை யாரையும் போலீசார் பிடிக்கவில்லை.