பா.ஜ.,வில் இணைந்த
மாற்று கட்சியினர்
வெண்ணந்துார்: வெண்ணந்துார், கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்து கொண்டனர். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராமன், ஒன்றிய தலைவர் அருள், மாவட்ட செயலாளர் தமிழரசு, மாவட்ட துணைத்தலைவர் ஹரிஹரன், ஒன்றிய பொதுச்செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடரும் வரித்துறை ரெய்டு
நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. 74. இவர், 'சத்தியமூர்த்தி அண்ட் கோ' என்ற பெயரில், நாமக்கல் மற்றும் சென்னையில் அலுவலகம் அமைத்து, சிவில் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறைகளில் டெண்டர் மூலம் கான்ட்ராக்ட் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டடங்களை கட்டி வருகிறார்.இந்நிலையில், கடந்த, 2ல் நாமக்கல் மற்றும் சென்னையில் உள்ள கான்ட்ராக்டர் சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அவர்கள், அங்கு பணியாற்றி வந்த பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை, நான்காம் நாளாக, நேற்று இரவு வரை நீடித்தது.சாராயம் காய்ச்சிய
2 பேருக்கு 'காப்பு'
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த ராக்கியாவலசு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று, மொளசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு காட்டுப்பகுதியில், 3 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர். அதில், கார்த்திகேயன், 43, செந்தில், 46, ஆகிய இரண்டு பேரை கைது செய்து, 2.55 லிட்டர் சாராயம், 'பொலிரோ' காரை பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற மயில்சாமி, 32, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.குடிநீர் குழாய் அமைக்க கோரி
பஞ்., கவுன்சிலர் போராட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட பாதரை பஞ்., 4வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார், 48. இவர், தி.மு.க., மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர், நேற்று காலை, தனது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில், குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: பாதரை பஞ்.,க்குட்பட்ட எனது வார்டில், அழகப்பா நகர் குடியிருப்பு பகுதியில், ஐந்து வீடுகளுக்கு குடிநீர் பைப் லைன் இல்லாத காரணத்தால், ஒரு குடிநீர் பைப் லைன் போட்டு தருமாறு பலமுறை கேட்டேன். ஆனால் தலைவர் போட மறுக்கிறார். இதை கண்டித்து பஞ்., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.5,000 பேர் பங்கேற்கும்
விழிப்புணர்வு மாரத்தான்
நாமக்கல்: நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க ஆண்டு விழா, தியாகி காளியண்ணன் பவுண்டேசன் மற்றும் போலீசார் சார்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, நாளை நாமக்கல்லில் நடக்கிறது.இதுகுறித்து, தியாகி காளியண்ணன் பவுண்டேசன் நிறுவன தலைவர், டாக்டர் செந்தில் கூறியதாவது: போதைப்பொருள் இல்லாத, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத சமுதாயம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், நாளை நாமக்கல்லில் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபம் அருகில் இருந்து துவங்கும் மாரத்தான் ஓட்ட துவக்க விழாவிற்கு, சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை வகிக்கிறார். நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைக்கிறார். மாநிலம் முழுவதும் இருந்து பதிவு செய்துள்ள, 5,000க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ரூ.1.70 லட்சத்துக்கு
கொப்பரை வர்த்தகம்
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், மொத்தம், 50 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 72.25 ரூபாய் முதல், 83.65 ரூபாய், இரண்டாம் தரம், 58.30 ரூபாய் முதல், 67.25 ரூபாய் என, மொத்தம், 1.70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 12ல் நடக்கிறது என, அதன் மேலாளர் கணேசன் தெரிவித்தார்.