| ADDED : ஜன 05, 2024 11:58 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பணம் கேட்டு தகராறு செய்ததால், மருமகன் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாமனார் காயமடைந்தார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கெடமலையை சேர்ந்தவர் வெள்ளையன், 58. இவர், கெடமலை அடிவாரத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது அண்ணன் மனைவி காடாயி, அண்ணன் மகன் ஒருவர், மகள்கள் மூவரும் வெள்ளையனுடன் வசித்து வருகின்றனர். இதில் கடைசி மகள் குப்பாயியை சேலம் மாவட்டம், ஜம்பூத்து மலையை சேர்ந்த நாச்சி மகன் சவுந்தர்ராஜனுக்கு, 37, திருமணம் செய்து வைத்தார்.குப்பாயி, சவுந்தர்ராஜன் குடும்பத்தினர் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி மலையாம்பூசாமி தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளையன், மருமகன் சவுந்தர்ராஜனிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன், ஜம்பூத்து மலையில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்தார்.நேற்று காலை மீண்டும் பணம் கேட்டு வெள்ளையன் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் நாட்டு துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டார். இதில், தோள்பட்டையில் வெள்ளையனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நாமகிரிப்பேட்டை போலீசார் ஆர்.புதுப்பட்டியில், சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.