| ADDED : ஏப் 28, 2024 04:12 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்து ஏரிக்கரையில், மருத்துவக்கழிவு, டயர், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றத்துடன் கரும்புகை வெளியேறுகிறது. அப்போது, அந்த வழியாக செல்பவர்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. ஏரிக்கரையில் வைக்கும் தீ சாலை வரை பரவி விடுகிறது. இவ்வழியாக வண்டியில் செல்வது கூட சிரமமாகி விடுகிறது என, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, நேற்று பட்டணம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சரவணன், துப்புரவு பணியாளர்களை ஏரிக்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். நேற்று மதியம், ஏரிக்குள் லாரி ஒன்று செல்வதை பணியாளர்கள் பார்த்தனர். இதையடுத்து செயல் அலுவலர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற அவர், குப்பையை கொட்டிவிட்டு கிளம்பிய லாரியை மடக்கி பிடித்தனர். லாரி, சேலம் பகுதியை சேர்ந்தது என்பதும், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை பட்டணம் வந்து கொட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து, லாரி உரிமையாளர் ஜெகதீசுக்கு, 45, தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், குப்பையை கொட்டிய லாரிக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.