| ADDED : ஜூன் 24, 2024 12:14 AM
கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி குணில் அருகே, காட்டு யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம் அடைந்தார்.கூடலுார், தொரப்பள்ளி, குணில், அல்லுார்வயல் பகுதிகளில், இரவில் காட்டு யானைகள் அடிக்கடி முகாமிட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றன.இந்நிலையில், குணில் அருகே உள்ள மொரப்பள்ளி பகுதியை சேர்ந்த மணிகண்டன், 42, என்பவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தொரப்பள்ளியில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பலத்த மழை பெய்துள்ளது. அங்குள்ள சாலையோரம் நின்ற காட்டு யானை, இவரை தாக்கியது. அவரின் சப்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், யானையை விரட்டி அவரை மீட்டனர்.வனத்துறை வாகனம் மூலம், கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். யானை தாக்கி காலமடைந்த மணிகண்டன், மசினகுடி சிங்கார வனச்சரகத்தில் வேட்டை தடுப்புக் காவலராக பணியாற்றி வருகிறார். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, முதுமலை வன எல்லையில் அகழி அமைத்துள்ளோம். இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளை கண்காணித்து விரட்டி வருகிறோம். வனத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.