உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசும் மரத்தை வெட்ட முயற்சி: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

பசும் மரத்தை வெட்ட முயற்சி: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

பந்தலுார்: பந்தலுார் பஜாரில் நுாற்றாண்டு பழமையான மரத்தை வெட்ட முயற்சி மேற்கொள்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆங்கிலேயர் காலத்தில் பந்தலுார் பகுதி சாலையோர பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் மரங்கள் நடவு செய்து அதனை பராமரித்து வந்துள்ளனர். கோடைகாலத்தில் மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குவது ரம்மியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மரங்கள் பறவைகளின் புகலிடமாக உள்ளது. இதில், நல்ல நிலையில் உள்ள பல மரங்களை, 'ஆபத்தான மரங்கள்' என்ற போர்வையில் கடந்த காலங்களில் வெட்டியதால் இப்பகுதி மலைகள் 'மொட்டை' அடிக்கப்பட்டு மழை காடுகளை இழந்துள்ளன. அடிக்கடி மழையும் பொய்து வருகிறது.

பசுமையான மரத்தை வெட்ட மனு

இந்நிலையில், பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவிலை ஒட்டி இப்பகுதிக்கு அடையாளமாக பழமையான மரம் ஒன்று உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மரம் நல்ல நிலையில் உள்ளதுடன், பறவைகள் வாழ்விடமாகவும் உள்ளது. இந்நிலையில் 'இந்த மரம் ஆபத்தானது,' என்று கூறி வியாபாரிகள் சங்கத்தினர், மரத்தை வெட்டி அகற்ற மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு மனு அனுப்பி இருந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மரம் வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது, 'இதே மரத்தை வெட்ட வேண்டும்,' என, மீண்டும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் கூறுகையில்,''இப்பகுதியில் உள்ள பழமையான அனைத்து மரங்களையும் 'ஆபத்தான மரங்கள்' என்று கூறி வெட்டுவது ஏற்றுக்கொள்ள இயலாது. இப்பகுதியில் கடந்த காலங்களில், மரக்கடத்தல் கும்பலுடன் அதிகாரிகள் இணைந்து, ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி அகற்றி உள்ளனர். பலர் மீது விசாரணையும் நடந்தது. பந்தலுார் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில், அதனை கண்டு கொள்ளாத வியாபாரிகள் சங்கம், நல்ல நிலையில் உள்ள பழமையான மரத்தை மட்டும் வெட்டுவதற்கு துடிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்த பசும் மரத்தை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது. அனுமதி வழங்கினால், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்,'' என்றார்.தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,'' மரத்தை வெட்ட மனு கெடுத்துள்ளனர். பசும் மரமாக இருந்தால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி