| ADDED : ஆக 07, 2024 11:14 PM
கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள, மேல் கூடலுார் கோக்கால் பகுதியில், கடந்த ஜூன் 27, 28ம் தேதிகளில், பெய்த பலத்த மழையின் போது, 'ஒன்றரை சென்ட்' குடியிருப்பு பகுதியில், வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் ஆய்வு செய்ய, மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர் யுன்யோலோ டெப், தலைமையில் புவியியல் துறை அதிகாரிகள், நேற்று ஒன்றரை சென்ட் பகுதிக்கு வந்து ஆய்வு பணிகளை துவங்கினர்.விரிசல் ஏற்பட்ட வீடு மற்றும் கட்டடங்கள்; அப்பகுதியில் ஓடும் நீரோடைகளின் நீரோட்ட பகுதிகள்; கழிவு நீர், மழை நீர் வழிந்தோடும் வழிகள் முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு பணிகள், 20 நாட்கள் நடைபெற உள்ளன.அதிகாரிகள் கூறுகையில், 'புவியியல் துறையினர் இன்று முதல் ஆய்வு உபகரணங்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என்றனர்.