உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் அடுக்கு மாடி கட்டடம் உயர் நீதிமன்ற உத்தரவால் இடிப்பு

குன்னுாரில் அடுக்கு மாடி கட்டடம் உயர் நீதிமன்ற உத்தரவால் இடிப்பு

குன்னுார்,:நீலகிரி மாவட்டம், குன்னுார் புரூக்லேண்ட் பகுதியில் கடந்த, 1985ம் ஆண்டில் தனியார் நிறுவனம் சார்பில், மனைப்பிரிவு பிரிக்கப்பட்டபோது, 'பூங்கா அமைக்க வேண்டிய இடம்' என, 71 சென்ட் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு கடந்த, 2017ல், 14 சென்ட் பரப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, ஜான் பிரிட்வினில் என்பவர் கட்டடம் கட்டினார்.இது தொடர்பாக, 2018ல் நகராட்சி சார்பில் கட்டடத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டதுடன், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்' என, நகராட்சிக்கு ஐகோர்ட், கடந்த ஆண்டு செப்., மாதம் உத்தரவிட்டது.தொடர்ந்து, நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி, நோட்டீஸ் வழங்கி, சம்பந்தப்பட்டவர் கட்டடத்தை இடிக்க நகராட்சி அறிவுறுத்தியது. தற்போது வரை கட்டடத்தை இடிக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை நகராட்சி சார்பில், குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், நகராட்சி கமிஷனர் சசிகலா முன்னிலையில், இரு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கியது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இந்த இடத்தை கோத்தாரி என்பவரிடம் இருந்து, ஜான் பிரிட்வினில் என்பவர் வாங்கி கட்டடம் கட்டினார். ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவின்படி நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்கப்பட்டது. இந்த கட்டடத்தின் மதிப்பு, 1.5 கோடி ரூபாய். கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும்' என்றனர்.

முன்னெச்சரிக்கை அவசியம்

குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் கூறுகையில், ''ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட இடம் நகராட்சிக்கு ஒப்படைத்த இடம் என்பது தெரிந்தும், அதை மறைத்து விற்பனை செய்வதால் இது போன்ற நிலை ஏற்படுகிறது. பொதுவாக இடங்களை வாங்கும் போது வில்லங்கம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதை போல, அந்த இடத்தை குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். போலி ஆவணங்களை நம்பி யாரும் ஏமாறக் கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ