| ADDED : ஆக 06, 2024 05:51 AM
மேட்டுப்பாளையம்: தோலம்பாளையம் அருகே சீங்குளி கிராமத்தில், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்கள் வினியோகம் செய்யப்பட்டன.இந்திய தொழில் வர்த்தக சபையின், மகளிர் அமைப்பான பிக்கி புளோ கோவை பிரிவு சார்பில், காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சீங்குளி கிராமத்தில், உலக பழங்குடியினர் தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பிக்கி புளோ முன்னாள் தலைவி தேவிகா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை பிரிவு தலைவி மீனா, டாக்டர் காமினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவின் ஒரு பகுதியாக கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு செல்ல ஏதுவாக, 32 சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.