| ADDED : ஜூன் 08, 2024 12:28 AM
ஊட்டி;ஊட்டியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சூட்டிங் மட்டம் பகுதியில் பகல் கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழு மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவானது, வனத்துறையுடன் இணைந்து கடந்த, 10 ஆண்டுகளாக,'வனப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் அகற்றுவது; சூழல் மேம்பாடு; புல்வெளி பாதுகாப்பு; சோலை மரங்களை நடவு செய்து பாதுகாத்தல்; நர்சரி அமைத்தல் மற்றும் வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' ஆகிய பணிகளை செய்து வருகிறது.இந்நிலையில், சூட்டிங் மட்டத்தில் நடந்த சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில், தோடர் மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து நடனமாடினர். இதில், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பங்கேற்று மர நாற்றுகளை நடவு செய்தனர்.நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழுவின் தலைவர் நார்தே குட்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.