| ADDED : ஜூன் 30, 2024 08:56 PM
குன்னுார்;குன்னுார் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் தீபந்தங்களுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. உணவைத் தேடி நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர்கிறது. இந்நிலையில், தற்போது சேலாஸ், உலிக்கல், கிளண்டேல், நேரு நகர், பில்லிமலை. பழைய அருவங்காடு, உபதலை, கரிமராஹட்டி, வெலிங்டன்,கோத்தகிரி சாலை உட்பட பல இடங்களிலும் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கரடிகள் உலா வருகிறது.நேற்று முன்தினம் இரவு சேலாஸ் நேரு நகர் பகுதியில் குடியிருப்பு காம்பவுண்டுக்குள் கரடி புகுந்ததாக கிடைத்த தகவலின் பேரில், வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் சென்று கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில்,''கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தி இரவு பகல் என இரு பிரிவுகளாக கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. உணவு கழிவுகள் சாலைகளிலும் ஆங்காங்கே கொட்டுவதாலும் கரடிகள் இவற்றை உண்பதற்காக அதிக அளவில் நகர் பகுதிக்கு வருகின்றன. சாலைகளில் குப்பைகள் கொட்டுவதை கட்டாயம் தடுக்க வேண்டும். பஞ்சாயத்து நிர்வாகமும் இதனை கண்காணிக்க வேண்டும்,''என்றார்.