மாநில எல்லை பகுதியில் உள்துறை செயலர் ஆய்வு
பந்தலுார்:நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள, பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில், 8 சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சோதனை சாவடிகளை ஒட்டி தமிழக, கேரளா, கர்நாடகா வனப்பகுதிகள் அமைந்துள்ளன. சமீப காலமாக, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், வயநாடு பகுதியில் போலீசார், நக்சல்களிடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்நிலையில், நேற்று மாநில உள்துறை செயலர் அமுதா, பந்தலுார் அருகே, பாட்ட வயல் மற்றும் நாடுகாணி, கக்கனல்லா சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தார். தற்போது, போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சோதனை சாவடி கட்டடங்கள் மற்றும் அவற்றின் வசதிகள், பாதுகாப்புகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, நீலகிரி எஸ்.பி.,சுந்தரவடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் வித்யா, வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உட்பட பலர் உடனிருந்தனர்.