| ADDED : ஜூலை 18, 2024 09:29 PM
குன்னுார்:ஊட்டியில் தொடரும் கனமழையால் ரயில் பாதையில் மரம் விழுந்து, மலை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னுார் -ஊட்டி மலை ரயில் பாதையில் லவ்டேல் அருகே நேற்று அதிகாலை பெரியளவிலான மரம் விழுந்தது. மரத்தை வெட்டி அகற்றும் பணி, 5 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் காலை குன்னுாரில் இருந்து, 7:45 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் ல்வ்டேல் வரை சென்று, சுற்றுலா பயணிகள் இறக்கி, பஸ்சில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.தொடர்ந்து, ஊட்டி- குன்னுார் இடையே இயக்கப்படும் அனைத்து மலை ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை, 7:10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், குன்னுார் வரை மட்டுமே இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.