| ADDED : ஆக 07, 2024 10:36 PM
கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை அரசு ஆங்கிலவழி துவக்கப் பள்ளியில், 'ரேபிஸ்' நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி ஆசிரியர் பாபு வரவேற்றார். தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமை வகித்தார்.உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவனத்தின் கல்வி அலுவலர் வரதராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:ரேபிஸ் நோய் பாலுாட்டிகள் மத்தியில் பரவக்கூடியது. ஒரு வெறிபிடித்த விலங்கு மூலம், மற்றொரு விலங்குக்கு இந்த நோய் பரவுகிறது. குறிப்பாக, 99 சதவீதம் வெறிபிடித்த நாய் கடிப்பதன் மூலமாகவே, இந்த நோய் பரவுகிறது. வெறி நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் கிருமிகள் நிறைய இருக்கும். கடித்த இடத்தில் இருந்து, அது பயணம் செய்து மூளையை சென்றடைகிறது. ரேபிஸ் தொற்று, நோயாக மாறிவிட்டால், பாதிக்கப்பட்ட மனிதன் அல்லது விலங்கை காப்பாற்றுவது கடினம். நாம் வளர்க்கின்ற செல்ல பிராணிகளுக்கு ரேபிசுக்கு எதிரான தடுப்பூசி ஆண்டுதோறும் போடுவதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம். மேலும், நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு போட்டு, 15 நிமிடங்கள் ஓடும் நீரில் கழுவுவதால் பாதிப்பு குறையும். மருத்துவமனைக்கு சென்று ரேபிசுக்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்வதால், இந்த நோயை, 100 சதவீதம் தடுக்க முடியும். உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவனம், 14 ஆண்டுகளாக மாவட்டத்தில் ரேபிஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.தெருவில் சுற்றி திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, அதற்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில், ரேபிசால் ஒருவர் கூட மாவட்டத்தில் மரணம் அடையவில்லை. கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்தப் பணியின் முக்கிய அம்சமாகும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.