| ADDED : ஆக 02, 2024 05:32 AM
குன்னுார் : மழையின் தாக்கம் காரணமாக, ஊட்டி-குன்னுார் இடையே இயக்கப்பட்ட ரயிலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையும் மெதுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நீலகிரிக்கு வருகை தரும் கேரள சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.இந்நிலையில், நேற்று பெய்த மழையில் ஆடர்லி - ஹில் குரோவ் இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டி வந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.அதே நேரத்தில், ஊட்டி- குன்னுார் இடையே மலை ரயில் பாதிப்பின்றி இயக்கப்பட்டு வருகிறது. எனினும் பகல், 12:35 மணிக்கு குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் தாமதமாக மதியம், 1:20 மணிக்கு புறப்பட்டு சென்றது. பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.