வயநாடு பகுதியில் ஏற்பட்ட துயரம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொபைல் போன்
பந்தலுார் : நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட, 400 குடும்பங்களுக்கு இலவசமாக 'மொபைல் போன்கள்' மற்றும் சிம் கார்டுகள் வழங்கப்பட்டது.கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள், 80 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த அனைத்து உடைமைகளையும் ஒரே இரவில் தொலைத்து விட்டு தற்போது நிற்கதியாய் உள்ளனர். அவர்களிடமிருந்த மொபைல் போன்கள் பறிபோன நிலையில், தங்களின் நிலை குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.'மீட்பு பணிகள் முழுமையாக முடியும் வரை முகாம்களில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது,' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சென்று போன் மற்றும் சிம்கார்டுகளை வாங்கி தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிராஜ் மற்றும் அவரது, 10 நண்பர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்தனர். தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நிதி திரட்டி அதன் மூலம், 400 மொபைல் போன்கள், சிம் கார்டுகளை வாங்கி, முகாமில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கினர். அவர்களுக்கு முகாமில் உள்ள மக்கள் நன்றி தெரிவித்தனர்.