| ADDED : ஏப் 22, 2024 01:54 AM
ஊட்டி;கூடலுார் அருகே நடுவட்டம் வனப்பகுதியில், இரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆயுதங்களுடன் சிக்கிய இருவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் கூடலுார் அருகே நடுவட்டம் வனப்பகுதியில் அதிகாலை, கூடலுார் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் உலா வந்த, மூன்று பேரிடம் வனத்துறையினர் விசாரிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடியுள்ளார். பைசல்,52, சாபு,50, ஆகியோரை பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் காட்டெருமை உட்பட வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் என்பது தெரியவந்தது.அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, இரு துப்பாக்கி (ஏர்கன்) மற்றும் தோட்டாக்கள், பல்வேறு ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபரை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் உதவியுடன் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.