| ADDED : ஏப் 19, 2024 01:53 AM
கோத்தகிரி:கோத்தகிரி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, டீக்கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி வருகின்றனர்.கோத்தகிரி பேரூராட்சியில், 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த காலங்களில் நகரில் மக்கள் தொகையுடன், குடியிருப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், ஈளாடா தடுப்பணையில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இருந்தது. தற்போது, மக்கள் தொகையுடன், குடியிருப்புகள் மற்றும் காட்டேஜ்கள் அதிகரித்துள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும், பேரூராட்சி நிர்வாகம், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது. இருப்பினும் நடைபாண்டு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதனை தவிர்க்க, அளக்கரை 'மெகா குடிநீர் திட்டம்' கொண்டுவரப்பட்டது. சரியான திட்டமிடல் இல்லாததால், இத்திட்டமும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், ஈளாடா தடுப்பணை தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. தட்டுபாடு காரணமாக, டீ கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், தனியாரிடம் இருந்து தண்ணீரை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் வறட்சியின் தாக்கம், மேலும், அதிகரிக்கும் என்பதால், பேரூராட்சி நிர்வாகம், அளக்கரை ஆதார மேம்பாட்டு பணியை விரைந்து நிறைவு செய்து, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.