| ADDED : ஜூன் 12, 2024 12:49 AM
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் வயல்வெளிகளில், வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகள், தமிழக-கேரளா எல்லையோர வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், பருவமழை துவங்கியவுடன் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் அதிக அளவில் உணவுக்காக வந்து செல்லும் பகுதியாக மாறி உள்ளது. அதில், 'திரிச்கொனிதிடெ' எனும் பறவைகள் குடும்பத்தைச் சேர்ந்த, இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் அதிக அளவில் பந்தலுாருக்கு வர துவங்கியுள்ளது. இதனை கருந்தலை அரிவாள் மூக்கன் என்றும் அழைப்பது வழக்கம்.பறவை ஆர்வலர் நவ்ஷாத் கூறுகையில், ''தென்மேற்கு ஆசியா, வட இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை அதிகமாக காணப்படுகிறது. மர கிளைகளின் மீது கூடுகட்டி முட்டையிடும் இந்த பறவைகள், நீர் நிலைகளில் காணப்படும் பூச்சிகள் மற்றும் தவளைகளை உணவாக உட்கொள்கிறது. பருவமழையின் காரணமாக, பந்தலுார் சுற்றுவட்டார வயல்வெளிகளில் காணப்படும் பூச்சிகளை உட்கொள்ள அரிய வகையான அரிவால் மூக்கன் பறவைகள் வந்து முகாமிட துவங்கியுள்ளன. இதனை உள்ளூர் மக்களும் பார்த்து ரசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வயல்களின் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் பெரும்பாலான பூச்சிகள் இறக்கின்றன. அவற்றை உண்ணும் இது போன்ற பறவைகள் பலியாகும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இது போன்ற பறவைகளை காப்பாற்றும் நோக்கில், மழை காலத்தில் அதிக விஷத்தன்மை கொண்ட களை மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.