உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாழை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி; உரிமையாளர் தலைமறைவு: வனத்துறை விசாரணை

வாழை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி; உரிமையாளர் தலைமறைவு: வனத்துறை விசாரணை

கூடலுார்: கூடலுார் அருகே வாழை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.நீலகிரி மாவட்டம், கூடலுார் ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில், ஒரு ஆண் யானை பாலகிருஷ்ணன் என்பவரின் நிலத்தில் உள்ள பாக்கு மற்றும் வாழை தோட்டத்தில் இருந்த சேற்றில் சிக்கி உயிரிழந்ததாக, நேற்று காலை வனத்துறைக்கு தகவல் வந்தது.கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, பயிற்சி வன அலுவலர் அரவிந்த், வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி மற்றும் வன ஊழியர்கள், வி.ஏ.ஓ., நாசர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, தோட்டத்தில் நான்கு கால்களும் சேற்றில் சிக்கிய நிலையில் காட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது. அதன் வாய் பகுதியில் மின் வேலி கம்பி இருப்பதும் தெரியவந்தது. வன ஊழியர்கள் சேற்றில் இருந்து யானையின் உடலை மீட்டனர்.முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், பிரகரதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் கால்நடை டாக்டர் சுகுமாரன் ஆகியோர், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த காட்டு யானைக்கு, 20 வயது இருக்கும். வாழை தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி, உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பால கிருஷ்ணன் என்பவரை தேடி வருகிறோம்,' என்றனர்.

இரண்டு மாதத்தில் மூன்று ஆண் யானைகள் பலி...!

கூடலுார், தொரப்பள்ளி தேன் வயல் பகுதியில் ஜூலை, 7ம் தேதி, ஆண் காட்டு யானை சேற்றில் சிக்கி உயிரிழந்தது. கடந்த, 30ம் தேதி தேவர்சோலை மச்சிக்கொல்லி பகுதியில், பாக்கு மரம் சாய்ந்த மின் கம்பியில் 'ஷாக்' அடித்து ஆண் யானை உயிரிழந்தது. தற்போதும், ஷாக் அடித்து ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது. தொடரும் யானை உயிரிழப்புகளால் வன ஊழியர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை