ஊட்டி : ஊட்டியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அரசின் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பட்டப்படிப்பு பயின்ற, 328 பயனாளிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், 1.64 கோடி ரூபாய் திருமண உதவி தொகை வழங்கினார்.'பட்டப்படிப்பு அல்லாத மகளிர்க்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 151 பயனாளிகளுக்கு, 37.77 லட்சம் ரூபாய்,' என, மொத்தம், 479 பயனாளிகளுக்கு, இரண்டு கோடியே, ஒரு லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் 3.08 கிலோ தங்கம் வழங்கினார்.நிகழ்ச்சியில், அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:நீலகிரியில் திருமண உதவி திட்டத்தில், 10 மற்றும் பிளஸ்-2 படித்த, 278 பெண்களுக்கு, 2.224 கிராம் தங்கம், 69.50 லட்சம் ரூபாய் ரொக்கம், பட்டப்படிப்பு முடித்த, 357 பெண்களுக்கு, 2.856 கிராம் தங்கம், 1.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, புதுமை பெண் திட்டத்தின் கீழ், 1025 மாணவியருக்கு, 1000 ரூபாய் வீதம், 10.25 லட்சம் ரூபாய், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், 977 பெண் குழந்தைகளுக்கு, 2.44 கோடி ரூபாய் வைப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 110 பெண்களுக்கு, 5.88 லட்சம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள், 2.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், இருவருக்கு சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களை அறிந்து மக்கள் பயன் பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கி எம்.பி., ராஜா பேசுகையில், '' மாநில முதல்வர் பெண்களுக்காக, சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம், பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பெண் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி பயின்று, எதிர்காலத்தில் உயர வேண்டும்,'' என்றார். ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.