ஊட்டி : ஊட்டியில் நடந்த, 78வது சுதந்திர தின நிகழ்ச்சியில், 15 பயனாளிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஊட்டியில், 78 வது சுதந்திர தின விழா, அரசு கலை கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின், போலீசார் அளித்த கம்பீர அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல், வருவாய், ஊரக வளர்ச்சி, பொது சுகாதாரம், சிறப்பு பகுதி மேம்பாட்டு உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 136 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். ரூ. 25 லட்சத்தில் நலத்திட்ட உதவி
பின், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், 15 பயனாளிகளுக்கு, 25 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் ஜோர்
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நடனம் நிகழ்ச்சி, கோத்தகிரி கரிக்கையூர் சிவலிங்கம் குழுவினரின் இருளர் சமூகத்தின் பழங்குடியினர் கலாசாரம் நடனம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை சிலம்பம் கலை கூடத்தின் சிலம்பாட்டம் நடந்தது. மேலும், இருதய ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி, யுனிக் பப்ளி ஸ்கூல் மாணவர்களின் நடனம், கோத்தகிரி மேரீஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி, தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் படுகர் நடனம், தொரப்பள்ளி கோடமூலா பொம்மன் குழுவினரின் பெட்ட குரும்பர் சமூகத்தின் பழங்குடியினரின் கலாசாரம் உள்ளிட்ட நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. துப்பறியும் நாய்கள் அசத்தல்
சுதந்திர தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, போலீசில் துப்பறியும் நாய்களான வெற்றி, மதி, ஷீரோ, மோக்கா ஆகியவற்றை சாகச நிகழ்ச்சிக்கு போலீசார் அழைத்து வந்தனர். முன்னதாக, கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோருக்கு பூங்கொத்தை நாய்கள் கொடுக்க வந்த போது போலீசார் அதனை வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து, திருட்டு சம்பவம் மற்றும் வெடி குண்டு சம்பவங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.ஆர்.டி.ஓ., மகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.