வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பொருட்கள் அடங்கிய பை
ஊட்டி: ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 123 மனுக்கள் பெறப்பட்டன. ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வீட்டு மனை பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர், விதவை உதவித்தொகை உட்பட, கோரிக்கைகள் அடங்கிய, 123 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறி வுறுத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவியாக, ஏழு பேருக்கு தலா 17 ஆயிரம் வீதம், 1.19 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி - 2026 முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கிய பை வழங்கினார். இதில், டி.ஆர்.ஓ., நாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன் உட்பட, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.