| ADDED : மார் 15, 2024 11:18 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே மாநில எல்லையில் நுால்புழா பகுதியில் விற்பனைக்கு வைத்துள்ள மூங்கிலால் உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பழங்காலங்களில் மக்கள் மூங்கில்கள் மற்றும் மரத்தினால் ஆன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில் நாகரிக மாற்றத்தின் காரணமாக, சில்வர் பிளாஸ்டிக் மற்றும் வெண்கல பொருட்கள் பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.இந்நிலையில், காலப்போக்கில் மூங்கில்களை வெட்டி பயன்படுத்துவதற்கு வனத்துறையினர் தடை விதித்த காரணத்தினால் மூங்கில் பொருட்கள் உருவாக்குவதிலும், பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.ஆனால், கேரளா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடும் மக்கள், வயது முதிர்ந்த மூங்கில்களை வெட்டி, பொருட்கள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. அதில், பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் இருந்து, சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில், நுால்புழா பகுதியில், மூங்கில் கூடைகள், முறம் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த வழியாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், ஆர்வத்துடன் இந்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.வியாபாரி சந்தோஷ் கூறுகையில், ''அழியும் நிலையில் உள்ள மூங்கில்களை எடுத்து வந்து கலைநயத்துடன் கூடிய பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். சில நாட்கள் நல்ல விற்பனையும், சில நாட்கள் விற்பனை குறைவாகவும் இருக்கும். எனினும் மக்கள் தற்போது குறைந்த விலையிலான மூங்கில் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.