| ADDED : ஜன 08, 2024 10:44 PM
அன்னுார்;இலை கருகல் நோயால் பல்லாயிரம் வாழைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.அன்னுார் வட்டாரத்தில், பிள்ளையப்பன் பாளையம், பொன்னே கவுண்டன் புதுார், கெம்பநாயக்கன்பாளையம், குப்பேபாளையம், பசூர், அல்லப்பாளையம், ஆம்போதி உள்ளிட்ட பகுதியில் 2000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நேந்திரன், கதலி ரக வாழை பயிரிடப்படுகிறது.கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் வாழை கருகல் நோய் அதிகரித்துள்ளது.இது குறித்து பொன்னே கவுண்டன் புதுார் விவசாயிகள் கூறியதாவது : எங்கள் பகுதியில் நுாற்றுக்கணக்கான வாழை மரங்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வாழை மரத்தில் மூன்று முதல் ஐந்து இலைகள் வரை வாடி கருகி விடுகின்றன. இந்த இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார் வெறும் 10 கிலோ எடை மட்டுமே விளைகிறது.வழக்கமாக ஒரு தார் 20 முதல் 22 கிலோ எடை வரை வரும். தற்போது வாழைத்தார் விலையும் குறைந்துள்ளது. விளைச்சலும் 50 சதவீதம் குறைந்துள்ளது. வியாபாரிகள் தண்டுக்கு இரண்டு கிலோ கழித்துக் கொள்கின்றனர். இந்த காரணங்களால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வாழை மரங்களை இலை கருகல் நோயிலிருந்து காப்பாற்ற தோட்டக்கலை துறை,வேளாண் பல்கலைக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.