| ADDED : ஆக 11, 2011 10:57 PM
குன்னூர் : 'நீலகிரியில் வனவிலங்கு - மனித மோதலை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகள் தோறும் ' வன உயிரிகள் பாதுகாப்பு குழு' அமைக்க வேண்டும்' என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தொடரும் விலங்கு- மனித மோதலை தவிர்க்கவும், வனச் செல்வங்களை கண்காணித்து பாதுகாக்கவும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளில் 'பல்வகை உயிரிகள் பாதுகாப்பு குழு' அமைத்து செயல்பட, மாவட்ட நிர்வாகம் கடந்தாண்டு மே 3ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், 'ஒவ்வொரு உள்ளாட்சி நிறுவனத்திலும் ஒரு தலைவர் மற்றும் உள்ளாட்சி அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்; ஆறு உறுப்பினர்களில் இருவர் பெண்கள், இருவர் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவை சார்ந்தவராக இருக்க வேண்டும். அவரவர் பகுதிகளில் உள்ள வனச் செல்வங்கள், வன உயிரிகளின் விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்வது உட்பட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது. மாவட்டத்தில் உள்ள சில நகராட்சி, பேரூராட்சிகள் குழு அமைத்து, உறுப்பினர் பட்டியலை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. அக்குழுக்கள், வனச் செல்வங்களை பாதுகாப்பது குறித்தோ, வன விலங்கு- மனித உயிர் மோதலை தவிர்க்கும் ஆலோசனை உட்பட எந்தவொரு ஆக்கப்பூர்வ பரிந்துரையையும் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கியதாக தெரியவில்லை; வெறும் 'கணக்கு' காட்ட மட்டுமே செயல்படுகின்றன. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், குறிப்பாக ஊராட்சிகள் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளன.