உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறப்பு நிலவுடமை சட்டத்தை நிறைவேற்ற ட்ரோன் சர்வே அவசியம்! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

சிறப்பு நிலவுடமை சட்டத்தை நிறைவேற்ற ட்ரோன் சர்வே அவசியம்! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

குன்னுார்: நீலகிரியில் தொடரும் பட்டா மாறுதல் பிரச்னைக்கு தீர்வு காண, 'ட்ரோன் சர்வே' சிறப்பு நிலவுடமை மேம்பாட்டு திட்டத்தை நிறைவேற்றுவது அவசியம்.நீலகிரி மாவட்டத்தில், 70 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளும், 20 ஆயிரம் காய்கறி சிறு விவசாயிகளும் உள்ளனர். இவர்களில் மூதாதையர்களின் நிலபுலன்களை அனுபவித்து வரும் படுகர் இன மக்கள், ஆவணங்கள் இல்லாமல் சமூக வழக்கப்படி பாகபிரிவினை செய்துள்ளனர்.தமிழகத்தில் நிலவுடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிலங்கள் மறு அளவீடு செய்து, 'பாஸ்' புத்தகம் வழங்கபட்ட போதும், நீலகிரியில் மூதாதையர்களின் இறப்பு, வாரிசு சான்று இல்லாததால் இத்திட்டம் செயல்படுத்தவில்லை.பழைய முறையில், புதிய புல எண்கள் வழங்கப்பட்டு, மறு அளவீடு திட்டம் செயல்படுத்தியும், நில உடமைதாரரின் பெயரில் பட்டா மாற்றம் செய்யமுடியவில்லை.

முதற்கட்ட முயற்சி தோல்வி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட நிர்வாகம் மூலம், சிறப்பு நில உடமை திட்டத்தை கூக்கல்தொரை கிராமத்தில் துவக்கி 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படும் பணிகள் முழுமை பெறவில்லை.இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த மீண்டும் தீவிரம் காட்டப்பட்ட நிலையில், 'ட்ரோன் சர்வே' செய்யும் பைலட் திட்டம் கிண்ணக்கொரை கிராமத்தில் முதன்முறையாக துவக்கப்பட்டது.அதில் வாரிசுகளின் 'டாகுமென்ட்' விபரங்கள் சரிசமமாக பிரித்து, அளவீடு உள்ளிட்டவை உரிய முறையில் பதிவு செய்யப்பட்டது. எனினும், கடந்த ஆட்சியின் போது, அரசின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

லஞ்சம், ஊழல் அதிகரிப்பு

'லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு' ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''தனி பட்டா இல்லாததால், உட்பிரிவு செய்த நிலத்திற்கு அனுபோக சான்றிதழ் பெற வேண்டும் எனில், வருவாய் துறையில், சில பணியாளருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் தொடர்கிறது.இதேபோல, சர்வே, பதிவு துறைகளில் அதிகரிக்கும் லஞ்சம், ஊழலால், விவசாயிகள்; படுகர் இன மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வருவாய் துறை; பதிவு துறை உடந்தையுடன் கூட்டு பட்டா நிலங்கள் முழுமையான ஆவணங்கள் இன்றி தாறுமாறாக விற்பனை செய்வதால் 'ரியல் எஸ்டேட்' ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனை அறிந்தும் உயர் அதிகாரிகள் கண்டும்; காணாமல் உள்ளனர்.மாவட்டத்தில், 32 ஆயிரம் ஏக்கர் பட்டா நிலங்களுக்கு சிக்கல்கள் உள்ளதால், புதிய விதிமுறைகளுடன் சிறப்பு நிலவுடமை மேம்பாட்டு திட்டம் உடனடியாக செயல்படுத்துவது அவசியம்,''என்றார்.

சட்ட சிக்கலுக்கு தீர்வு

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கூறுகையில், ''தற்போது குன்னுாரில் இளித்தொரை; குந்தாவில் கிண்ணக்கொரை; கோத்தகிரியில் நடுஹட்டி; ஊட்டியில் கக்குச்சி கிராமங்களில் முதற்கட்டமாக இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.கூட்டு பட்டாக்களில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண உரிய 'அபிடவிட்' இணைத்து, 'லோக் அதாலத்' மற்றும் 'இன்டர் பிளீடர் ஸ்யூட்' என, இரு பிரிவுகளில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், தாசில்தார் மூலம் தீர்வு ஏற்படுத்தப்படும். இதன்பிறகு வருவாய் துறையின் மூலம் தனிபட்டா பெற நடவடிக்கை எடுக்கப்படும். 'ட்ரோன்சர்வே' செய்ய செலவுகள் அதிகம் என்பதால், அரசின் முடிவுக்கு பின்பு தான் இதனை செயல்படுத்த முடியும்,'' என்றார்.

வாக்குறுதி என்னாச்சு?

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., சார்பில் குன்னுார் தொகுதியில் போட்டியிட்ட ராமச்சந்திரன், 'நீலகிரியில் கூட்டு பட்டா தொடர்பான பிரச்னை நீடிப்பதால் நிலவுடமை திட்டத்தை செயல்படுத்த, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வாக்குறுதி அளித்தார்.மக்கள் கூறுகையில், ' அவர் கூறியதை போல வெற்றி பெற்று, தற்போது சுற்றுலா துறை அமைச்சரான ராமச்சந்திரன், மாநில முதல்வரிடம் பேசி 'டிரோன் சர்வே' திட்டத்தை விரைவாக செயல்படுத்தி, படுக மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ